எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே, மத்திய அரசை வசைபாடும் கருத்துக்களை எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொல்லும் முன்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம், நீங்க இதை பற்றி படித்து விட்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்டு விட்டு பேச ஆரம்பித்தார். விஜயகாந்த் பாணியில் புள்ளி விபரங்களை அடுக்கினார் அண்ணாமலை. இந்தியாவில் கடந்த ஆண்டு நீட் மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகம். இவற்றில் பெரும்பாலானவை காலியாகவே உள்ளதாக அண்ணாமலை கூறினார்.
“மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பில், மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் என்பதற்கு அர்த்தம், நீட் எழுதி இருந்தாலே போதும் என்பது தான். அவர்கள் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.” “எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வே கட்-ஆஃப் தேர்வு தான். இதைத் தான் தற்போது பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் முழுமையாக நிரம்பும்.
“நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலிலும், அடுத்தடுத்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெறுவர். நீட் தேர்வு மதிப்பெண்ணிற்கு ஏற்ற வகையில், அவர்கள் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் சேர முடியும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி போதுமானது என்பதால் தான் ஜீரோ பெர்சண்டைல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது என்றார் அண்ணாமலை.