மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனங்களை முன் வைத்து போட்காஸ்ட் வெளியிட்டிருக்கும் நிலையில், அதற்கு முதல் ஆளாக பதிலடி கொடுத்திருக்கிறார் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
திமுகவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பதிலடி கொடுக்கும் விவகாரத்தில் அண்மைகாலமாக அண்ணாமலையை ஓவர் டேக் செய்து வருகிறார் தமிழிசை. இதன் மூலம் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்புவேன் என்பதை அவர் உணர்த்தி வருகிறார். ‘பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை, எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் பேசியதை ஏற்க முடியாது என்றும் இந்த நாடு வேகமாக முன்னேறி வருகிறது எனவும் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். அதேபோல் நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்யம் ஏன் என்பது பற்றியும் நீண்ட விளக்கம் அளித்த தமிழிசை, நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்வதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். நீட் தகுதி மதிப்பெண் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றார். மருத்துவத்துறைக்கு பலனளிக்கக் கூடிய திட்டத்தை அரசியல் ஆக்கி வருகிறார்கள் என வேதனைத் தெரிவித்தார்.
சனாதனம் குறித்து அநாவசியமாக யாரும் சத்தம் போட்டால் சட்ட ரீதியாக அதனை சந்திக்க வேண்டும் என்பது தான் தனது கருத்து என்றும் டேனிஷ் அலி எம்.பி. மீதான பாஜக எம்.பி.,யின் பேச்சு கண்டனத்திற்குரியது தான் எனவும், தவறு யார் செய்தாலும் தவறு தான் எனவும் தமிழிசை தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினே நடிகராக நடித்துவிட்டு நடிகையை பற்றி பேசுவதா என்றும் இன்று குடியரசுத் தலைவர் மீது இவ்வளவு அக்கறை காட்டும் திமுக, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது திரவுபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை என்ற கேள்வியை தமிழிசை எழுப்பினார்.