வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பேர் பயணம்: பிரதமா் மோடி

நாட்டில் 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமா் மோடி, வந்தே பாரத் ரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; அவற்றில் ஏற்கனவே 1,11 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்திய ரயில்வே சாா்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், பிகார், மேற்கு வங்கம், கேரளம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களுக்கு மேலும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில், திருநெல்வேலி-சென்னை, விஜயவாடா-சென்னை, உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-புரி, ஜாம்நகர்-அகமதாபாத் இடையிலான 9 வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1 மணிக்கு பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முன் மோடி தனது உரையில், “வந்தே பாரத் ரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; அவற்றில் ஏற்கனவே 1,11,00,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஏற்கெனவே 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 9 ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வந்தேபாரத் ரயில்கள் புதிய இந்தியாவின் புதிய உணர்வையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்துகின்றன. வேகம், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளுடன் பொருந்துகிறது. இந்த ரயில்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்திய ரயில்வே நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகவும் நம்பகமான சக பயணியாகும். ஒரே நாளில் ரயில்வேயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம்” என்று அவர் கூறினார்.

திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல் .முருகன், திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இந்த ரயிலில் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை பயணித்தார்.

ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பிலும், திருநெல்வேலி, மதுரை வழித்தட மக்கள் சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். நாடு முழுவதும் இன்று 9 வந்தே பாரத் விரைவு ரயில்கள் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில் மூலம் அதிவேகமாக சென்னை சென்றடைய முடியும்.

வந்தே பாரத் ரயிலானது உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 2009 முதல் 2014 வரை ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தக்கு இந்த ஆண்டு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர ராமேசுவரம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை ரயில் நிலையங்களை சீரமைப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். அது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்” என்றார்

திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 7 மணி 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடையும். இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது.

மதுரையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயிலை போன்று உருவாக்கப்பட்ட கேக்கை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து வெட்டினர். கேக் துண்டை எடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார். பாஜக தொண்டர்கள் ‘பாரத் மாதா கி ஜெ’ என கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட தமிழிசை சௌந்தரராஜன், ‘வந்தே பாரத்! வந்தே மாதரம்’ என கோஷமிடுமாறு கூறினார். அவர்களும் வந்தே பாரத் எனக் கோஷமிட்டனர்.