அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தூய்மையை வலியுறுத்தி காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும். இதன்படி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.
பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இயக்கம் தொடர்பாக கேபினட் செயலாளர், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதன்படி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது.
பூங்காக்கள், நதிகள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மை இயக்கம் நடத்தப்படும். மேலும் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.