புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாக்கள் சட்டமானால் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு காலனித்துவ சட்டங்களுடன் தொடர்புடையது. ஆனால் தற்போதைய 3 புதிய மசோதாக்களிலும் காலனித்துவ முத்திரை இல்லை. மாறாக இந்திய மண்ணின் சுவை உள்ளது. இந்த சட்டங்களின் மையப்புள்ளி அரசியலமைப்பு, மனித உரிமைகள் மற்றும் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதாகும். சுமார் 160 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டங்கள் முற்றிலும் புதிய அணுகுமுறை மற்றும் புதிய அமைப்புடன் கொண்டு வரப்படுகிறது. புதிய முன்முயற்சிகளுடன், சட்டத்திற்கு ஏற்ற சூழல் அமைப்பை உருவாக்க அரசால் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டங்கள் தண்டனையை விட நீதி வழங்குவதில் முக்கியத்துவம் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.