கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் பிரதமர் தேவகவுடா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, “கர்நாடகாவில் தற்போதுள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்ப வேண்டும். நான் தற்போது உயிரோடு இருப்பது, அரசியல் செய்வதற்காகவோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ அல்ல. மாநில மக்களை பாதுகாக்கவே நாங்கள் இங்கே இருக்கிறோம். அதற்காகவே எனது கட்சி உள்ளது” என உணர்ச்சிபொங்க தெரிவித்தார்.
இதனிடையே, காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பெங்களூருவில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட ஆதரவு அமைப்புகளும், விவசாய சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன. கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டமைப்பு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் உள்பட மொத்தம் 175 அமைப்புகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக மாண்டிய மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில், நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ ஆகியவற்றின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு பல்வேறு தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த முழு அடைப்புப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, “ஜனநாயகத்தில் போராட்டங்கள் நடத்துவதற்கு இடம் உள்ளது. எனவே, போராட்டங்களுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்ய மாட்டோம். காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. எங்கள் வழக்கறிஞர்கள் வலிமையான வாதத்தை முன்வைப்பார்கள். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்கின்றன” என தெரிவித்துள்ளார்.
“கர்நாடகாவில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்குவது மிகவும் கடினம். அனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த விவகாரத்தில் கர்நாடகாவின் நலனை நாங்கள் பாதுகாப்போம். அது எங்கள் கடமை” என்று துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.