பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்த நிலையில், இது ஒரு தந்திரமாக இருக்கலாம் என்றும் பாஜக சொல்லியே கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை எங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என்று அதிமுக அறிவித்துள்ளது. தேசிய ஜனநயாக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து தனியார் செய்தி தொலைககட்சிக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், அதிமுக முடிவு நிலையானது இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முத்தரசன் கூறியதாவது:-
அதிமுக முடிவை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். நிலையானது அல்ல. அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி தனித்த முறையில் சந்தித்து பேசினார். வெளிப்படையாக இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பில் இருந்துமே அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி போயிருக்கிறார்கள். பாஜக தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஜேபி நட்டாவையும் சந்தித்து உள்ளார்கள். ஜேபி நட்டா, நாம சந்தித்தைதையே வெளியே சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இரண்டு அரசியல் கட்சி தலைவர்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விதான் எழுகிறது. இது ஏதோ ஒரு யுக்தி.. அவ்வளவுதான்.. தந்திரம்.. இந்த தந்திரம் இவர்களால் (அதிமுக) உருவாக்கப்பட்ட தந்திரமா அல்லது பாஜகவின் ஆலோசனையின் எடுக்கப்பட்ட முடிவா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
பாஜக வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பமாக தொடக்கத்தில் இருந்து உள்ளது. ஜெயலலிதா இனி எக்காரணத்தை கொண்டும் பாஜகவோடு அரசியல் உறவு கொள்ளாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்கள். அதற்கு மாறாகத்தான் எடப்பாடி இந்த முடிவை எடுத்தார். தொண்டர்களை பொறுத்தவரை பாஜகவுடன் சேரக்கூடாது என்பதுதான் 100 க்கு 100 சதவீதம் விருப்பம். எடப்பாடி பழனிசாமிக்கு மனப்பூர்வமாக விருப்பமா அல்லது சொல்லி வைத்து செய்யப்படுகிறதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.