அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜரானார்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள செம்மண் குவாரியில் அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அரசு வக்கீல் சீனிவாசன் மூலமாக கடந்த 8-ந்தேதியன்று அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோபிநாத், சதானந்தன், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். இதையடுத்து விழுப்புரம் கோர்ட்டில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராகினார். அப்போது ஜெயக்குமாரிடம் எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள் என்று நீதிபதி பூர்ணிமா கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜெயக்குமார் கூறுகையில், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதனை சூறையாடியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், இயற்கை ஆர்வலராகவும்தான் இம்மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும்படி ஜெயக்குமார் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இதை கேட்டறிந்த நீதிபதி பூர்ணிமா, இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.