தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த வடிவேல் கடந்த 23ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேல் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாயிலாக சிலர் உறுப்புகளை தானமாகப் பெற்று பயனடைந்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர், உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல்கள் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பின்படி. இன்று காலை சின்னமனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நேரில் சென்று தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இறுதி அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:-
மூளைச்சாவு அடைந்த வடிவேலின் உடல் உறுப்புகளை தானமாக அளித்த அவரது மனைவி, தாய், சகோதரியின் தியாக உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம். கடந்த 23 ஆம் தேதி உடல் உறுப்பு தான தினத்தன்று முதல்வர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இனிமேல் உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தார். மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் அல்லது அந்த நிலையில் உள்ள அதிகாரிகள் மரியாதை அளிப்பார்கள் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று வடிவேலின் உடலுக்கு நானும், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளோம். உயிரிழந்த வடிவேலின் தந்தையும் கண் பார்வையில்லாமல் தவித்து வருவதை அறிந்தோம். அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து கண் தானம் மூலம் பார்வையைத் திரும்பப் பெற இயலுமென்றால் அவரது பெயரையும் ட்ரான்ஸ்ப்ளான்ட் கமிட்டியில் இணைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.