மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் செல்போன் இணையதள சேவைகள் 5 நாள்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், போராட்டத்தை மேலும் பெரிதாக்காமல் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் இணையதள சேவை முடக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக தவறான செய்திகள், வதந்திகள் பரவுவதைத் தடுக்க மற்றும் வன்முறைக்கு காரணமாக பிற செய்திகள் பரவுவதைத் தடுத்து சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தற்காப்பதற்காக இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. குழுக்களைச் சேர்க்கவும், வன்முறை செயல்களில் ஈடுபடவும் மிகப்பெரிய குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும். இதனால், இன்று மாலை 7.45 மணிமுதல் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 7.45 மணிவரை செல்போன் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த நான்கு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட இணைய சேவை ஓரிரு நாள்களுக்கு முன்னதாகவே செயல்படத் தொடங்கின. இந்த நிலையில் நேற்று மணிப்பூரில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், புகைப்படங்கள் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த ஜூலை 6-ம் தேதி காணாமல் போன பிஜாம் ஹெம்ஜித்(20), ஹிஜாம் லிந்தோயிங்கம்பி(17) ஆகிய இரு மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இந்த புகைப்படத்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக் கைதியாகப் பிடித்துவைத்திருப்பது போன்றும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவர்களின் சடலங்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புப் பணியாளர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மக்கள் அவசரப்பட வேண்டாம். நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் புகைப்படம் வெளியான சம்பவம் தொடர்பான வழக்கு ஏற்கனவே சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநில காவல்துறை, மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து கொலை செய்த குற்றவாளிகளை அடையாளம் காணவும் இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்கப் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.