கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தருவதில் திமுக ஆட்சி தோல்வியடைந்துள்ளது: டி.டி.வி. தினகரன்!

கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தருவதில் திமுக ஆட்சி தோல்வியடைந்துள்ளது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-

திமுக மீது மக்கள் மத்தியில் ஏற்கெனவே கடும் அதிருப்தி நிலவுகிறது. எனவே, தமிழ்நாட்டின் நலன் கருதி மக்கள் வாக்களிப்பர் என நம்புகிறோம். எந்தக் கூட்டணியுடன் அமமுக இணைந்து செயல்படும் என்கிற ஊகங்களுக்கு சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். அதற்கு வாய்ப்பில்லாமல் போனால் தனித்துப் போட்டியிடும்.

அதிமுகவினர் கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று பேசிய பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இதனால், பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசியதால்தான் கூட்டணியிலிருந்து விலகுவதாக அவர்கள் கூறினாலும், அதையும் தாண்டி ஏதோ காரணம் இருப்பதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை பாஜகவும் புரிந்து கொண்டிருக்கும். அதிமுகவினர் நெல்லிக்காய் மூட்டை போன்று என பல முறை கூறியுள்ளேன். இரட்டை இலையைக் காட்டி மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றி வருகின்றனர். இரட்டை இலை மட்டும் இல்லாவிட்டால், அக்கட்சி நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறிவிடும்.

கூட்டணிக் கட்சி ஆட்சி செய்கிற கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தருவதில் திமுக ஆட்சி தோல்வியடைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினால்தான் காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.