துணைவேந்தர் தேடல் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நிராகரித்து உயர் கல்வித் துறை அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 6-ம் தேதி சென்னைப் பல்கலைகழகத்தின் வேந்தரான ஆளுநரால் பல்கலைகழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் – தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு ராஜ்பவனின் இணையதளத்திலும் வெளியிடபட்டது. மேலும், செய்திக் குறிப்பின் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடிக்காமல், அதனை மீறும் வகையில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், யூஜிசி பரிந்துரைகளை தவிர்த்து தேடுதல் மற்றும் தேர்வுக் குழுவின் அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளார். 13-ம் தேதி அன்று அரசிதழில் வெளியான இந்த அறிவிப்பு யூஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதலின்றி அமைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பல்கலைகழக விவகாரங்களில் உயர்கல்வித் துறைக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வேந்தர் (ஆளுநர்) கேட்டுகொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.