காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி இன்று முதல் தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்; ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறக்க முடியாது; உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. முதலில் காவிரியில் 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை ஏற்க மறுத்தது கர்நாடகா. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை உறுதி செய்தது. ஆனால் சொற்ப அளவு நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. மண்டியா பந்த், பெங்களூர் பந்த் என தொடங்கி நாளை கர்நாடகா தழுவிய பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளன. கர்நாடகா முழுவதும் நாளை நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு 2,000க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு ஓரளவுதான் ஆதரவு கிடைத்தது. இதனால் காவிரி டெல்டா சாராதா இதர கர்நாடகா பகுதிகள் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தருமா? என்பது கேள்விக்குறி எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. இதனை முற்று முழுதாக கர்நாடகா அரசு ஏற்க மறுத்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு சொட்டு நீர் கூட தர முடியாது என பிடிவாதம் காட்டுகிறது கர்நாடகா அரசு. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, காவிரியில் தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை இன்று முதல் திறக்க ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அணைகளில் போதுமான நீர் இல்லை; வறட்சி நிலவுகிறது. இது தொடர்பாக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போகிறோம் என்றார். முன்னதாக சாம்ராஜ்நகர் மாதேஸ்வரா மலை கோவிலில் நேற்று வழிபாடு நடத்தினார் சித்தராமையா. கர்நாடகாவுக்கு மழை பெய்ய வேண்டி சித்தராமையா பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.