மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு பா.ஜ.க. தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறிஉள்ளதாவது:-

அழகிய மணிப்பூர் மாநிலம் போர்க்களமாக மாறியதற்கு பா.ஜ.க. தான் காரணம். இந்த சண்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஆயுதம் ஏந்தியிருப்பது இப்போது வெளிப்படையாக தெரிகிறது. 147 நாட்களாக, மணிப்பூர் மக்கள் அவதிப்படுகின்றனர், ஆனால் பிரதமர் மோடிக்கு அந்த மாநிலத்திற்கு செல்ல நேரமில்லை. இந்த வன்முறையில் மாணவர்கள் குறிவைக்கப்பட்ட கொடூரமான படங்கள் மீண்டும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. பா.ஜ.க.வின் திறமையற்ற மணிப்பூர் முதல்-மந்திரியை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டிய தருணம் இது. எந்த ஒரு குழப்பத்தையும் கட்டுப்படுத்த இது முதல் படியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.