நியோ மேக்ஸ் இயக்குனர்களை ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் சிபிஐக்கு மாற்றுவோம்: ஐகோர்ட்

நியோ-மேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களையும் ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்து ஆவணங்களை பறிமுதல் செய்யாவிட்டால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டியது வரும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாக 10க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் உள்ளன. கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டி, வாடிக்கையாளர்களிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவன இயக்குநர்களான மதுரையைச் சேர்ந்த கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி, முகவர்கள் மணிவண்ணன், செல்லம்மாள் மற்றும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மோசடி புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே நியோ மேக்ஸ் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி கும்பகோணத்தை சேர்ந்த கவுதமி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தனது வாதத்தில் “முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. மனுதாரரை போனில் மிரட்டி வருகின்றனர். இதனால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “நியோ-மேக்ஸ் மோசடி தொடர்பாக 96 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரை 11 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய இயக்குனர்களான கமலகண்ணன், சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளனர். 9,500 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முறையாக நடைபெற்று வருவதாக கூறினார்.

இதையடுத்து நீதிபதி, “96 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 11 இயக்குநர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் அனைத்து இயக்குநர்களையும் கைது செய்து, அனைத்து சொத்து ஆவணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையெனில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டியது வரும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

இதனிடையே நியோ மேக்ஸ் பிரச்சினைக்கு தீர்வு காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரி நியோ மேக்ஸ் இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் உள்ளனர். இதனால் மாநில அளவில் குழு அமைக்கலாம். இதற்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கைக்கும் தொடர்பில்லை. குழு அமைத்தாலும் போலீஸார் விசாரணையை தொடரலாம் என்றார். அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்று விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.