உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்!

அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அக்டோபர் 3 முதல் 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதத்துக்கு ஒருமுறை உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் 3-ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்: நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் முதல் அமர்வில் பொதுநலன் மனு, ஆள்கொணர்வு மனு, குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லெட்சுமிநாராயணன் 2வது அமர்வில் ரிட் மனுக்கள், ரிட் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதிகள் ஆர்எம்டி டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் 3-வது அமர்வில் உரிமையியல் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2022-ம் ஆண்டிலிருந்தும், நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் (அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்புக் வழக்கின் மேல்முறையீடு மனுக்களை விசாரித்து வருபவர்) 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் தாக்கலான கனிமம், நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல், சுதந்திர போராட்ட தியாகிகள் தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி பி.புகழேந்தி 2019 வரையிலான வரி, சுங்கம், கலால், வனம், தொழில், மோட்டார் வாகனம், அறநிலையத் துறை மனுக்களை விசாரிக்கின்றனர்.

நீதிபதி பட்டு தேவானந்த், 2019 வரையிலான உரிமையியல் மனுக்களையும், நீதிபதி ஜி.சந்திரசேகரன், 2021-ம் ஆண்டிலிருந்து தாக்கலான இரண்டாவது மேல்முறையீடு, உரிமையியல் மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி வி.சிவஞானம், ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களையும், நீதிபதி ஜி.இளங்கோவன், 2022 ஆண்டு முதலான குற்றவியல் நடைமுறைச் சட்டம் 407, 482 பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றவியல் உண்மை மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

நீதிபதி கே.முரளிசங்கர் 2020 முதலான உரிமையியல் மனுக்களையும், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 2017 முதல் 2020 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி ஆர்.விஜயகுமார், 2020 முதலான தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்களையும், நீதிபதி எல்.விக்டோரியாகவுரி 2020 வரையிலான முதல் மேல்முறையீடு, உரிமையியல் மேல்முறையீடு, 2வது மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், 2021 ஆண்டு வரையிலான குற்றவியல் உண்மை மனுக்கள், பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளின் குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள், குற்றவியல் சீராய்வு மனுக்களையும், நீதிபதி ஆர்.கலைமதி, 2016 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள், நீதிபதி பி.வடமலை, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு 2022 முதலானது குற்றவியல் சீராய்வு மனு, பெண்கள், குழந்தைகள் தொடர்பான மனுக்களின் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிக்கின்றனர்.