சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக 2 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. மழைக்காக ஒதுங்கி இருந்தவர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்திருக்கின்றனர். தீயணைப்பு துறையினரின் முயற்சியோடு இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் துர்திஷ்டவசமாக, கந்தசாமி எனும் பெட்ரோல் பங்க் ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு பின்னர் பேட்டியளித்த அவர், “பெட்ரோல் பங்கின் கூரை சரிந்து சிலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக இந்தியன் ஆயில் கார்பரேஷ் சிஇஓவிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறையோ, மாநகராட்சியோ எலக்ட்ரிக் கட்டர் கொண்டு இதனை துண்டித்தால் அதிலிருந்து பறக்கும் நெருப்பு துகள்கள் பெட்ரோல் பங்கில் பட்டால் பெரிய விபத்து ஏற்படும். இதனால் இதனை தவிர்த்திருக்கிறோம். இந்த பங்க் மேற்கூரை 16 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்களும், வீடுகளும் தங்களின் கட்டமைப்பை உறுதி செய்துகொள்வது நல்லது” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக பங்க் உரிமையாளர், மேலாளர் மீது காவல்துறையினர் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கனமழையால் திடீரென பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகி இருப்பது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.