ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி வரும் ரிசர்வ் வங்கி, அதனை வங்கியில் மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதோடு, செப்.30-க்குள் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாவிட்டால் அது உங்களிடம் இன்னொரு தாளாக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியது.
இந்நிலையில், ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லும் என்றும், ஆனால் அவற்றை ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்டுள்ள 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் இவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும் என்றும், அதுவும் ஒரு நேரத்தில் அதிகபட்சம் ரூ.20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பணத்தை மாற்றுவதாக இருந்தால், பணத்தை தபால் அலுவலகம் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும் என்றும், அவ்வாறு அனுப்பப்படும் பணம் சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவது ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நீதிமன்றங்கள், சட்ட அமைப்புகள், அரசு துறைகள் ஆகியவை ரூ.2000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களுக்கு அனுப்பி வரவு வைத்துக்கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.