ஹமாஸ் படையை தேடி தேடி அழிப்போம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை!

ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் மீண்டும் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அங்கே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கே நிலவி வருகிறது. இதைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பெரியளவில் பலன் இல்லை. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் அங்கே மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது. நேற்று அதிகாலையிலேயே காசா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் அதிரடியாக டிரோன் தாக்குதலை நடத்தினர். இதனிடையே இஸ்ரேலும் இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீன் மக்களைப் பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் நிச்சயம் தரைமட்டமாக்கும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். தாக்குதலைத் தீவிரப்படுத்த உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த யுத்தம் அடுத்த கட்டத்திற்குச் செல்வது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “காசா மீண்டும் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டனர். இஸ்ரேலில் உள்ள பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அனைவரும் கொடூரமாகக் கொன்று வருகின்றனர். ஹமாஸ் ஒரு கொடூரமான போரைத் தொடங்கியிருக்கிறது. இது எங்களுக்கு மிகவும் தாங்க முடியாத ஒன்று தான், இருப்பினும் என்ன விலை கொடுத்தேனும் இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஹமாஸை இஸ்ரேலில் உள்ள அனைவரையும் கொல்ல நினைக்கிறது. எல்லைக்குள் புகுந்து அனைவரையும் கொன்று வருகின்றனர். பெண்களை, இளைஞர்களைக் கடத்தி சென்று கொண்டு இருக்கின்றனர். இன்று நடப்பது முன்னெப்போதும் இல்லாதது. இதை நாங்கள் தொடர விடமாட்டோம். இன்னொருமுறை இது நடக்காது. இஸ்ரேல் தயாராகி விட்டது. ஹமாஸை முறியடிக்க, இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போகிறது. நாங்கள் அவர்களை அழிப்போம். அவர்களை நாங்களும் பழிவாங்குவோம். ஹமாஸ் ஒளிந்திருக்கும் அனைத்து இடங்களையும் நாங்கள் தரைமட்டம் ஆக்குவோம்.

காஸாவில் வாழும் மக்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.. நாங்களும் தாக்குதலைத் தொடங்கப்போகிறோம்.. உடனடியாக காஸாவில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.. நாங்கள் முழு வீச்சில் போரைத் தொடங்க உள்ளோம். ஒவ்வொரு இடமாகச் சென்று ஹமாஸ் அழிப்போம். வீடு வீடாகச் சென்று அவர்களை அழிப்போம். இந்த சண்டையில் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள், பிணைக்கைதிகளாக இருப்பவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும், ஹமாஸ்க்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான். எங்கள் மீது கை வைத்து உங்களின் கணக்கை நாங்கள் முடிப்போம். காசா எல்லையில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் உடன் நாங்கள் எப்போதும் இருப்போம்.

அன்பிற்குரிய இஸ்ரேல் படை வீரர்கள், போலீஸ் அதிகாரிகளே. நாம் யூத முன்னோர்களை மனதில் வையுங்கள். நீங்கள் உங்கள் மக்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் போராடுகிறீர்கள். இஸ்ரேல் மக்கள் உங்களை வாழ்த்துகிறார்கள்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிற நாட்டுத் தலைவர்களுடன் நான் பேசினேன். இஸ்ரேலின் நடவடிக்கை மற்றும் சுதந்திரத்துக்கு ஆதரவு தருவதாகக் கூறி உள்ளனர். ஆதரவு ஆதரவு தந்த நாடுகளுக்கு நன்றி. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இஸ்ரேல் மக்களும் உலக நாடுகளும் ஒன்றுபட்டு நிற்போம். இஸ்ரேல் மக்கள் ஆதரவும் எங்களுக்குத் தேவை. இந்த போர் கண்டிப்பாக அதிக காலம் நீடிக்கும்.. இது கடினமான சூழல் தான். நம் முன் பல சவால்கள் இருக்கிறது. எப்படி இருந்தாலும் நான் ஒரு உறுதியைக் கொடுக்கிறேன். நமது இஸ்ரேலை முழுமையாக வென்றெடுப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.

ஹமாஸ் படையினர் ஆபரேஷன் அல் அக்ஸா ப்ளூட் என்ற பெயரில் இந்தத் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். பாலஸ்தீன மக்கள் புனித தளமாகக் கருதும் அல்-அக்ஸா மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், தங்கள் மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறை தாக்குதல் அதிகரித்ததற்கும் பதிலடியாக இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் படை தெரிவித்துள்ளது. நேற்று காலை சுமார் 20 நிமிடத்தில் அங்கே 5000 ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஆபரேஷன் வாள் ஆஃப் அயர்ன் என்ற பெயரில் பதிலடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். முதலில் போர் விமானங்கள் மூலம் காசா பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. வரும் காலத்தில் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடவடிக்கையைத் தொடங்கியது. ஏற்கனவே இஸ்ரேல் நாட்டில் போர் தொடங்கிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போய் இருக்கிறது.இந்த தாக்குதல்களில் குறைந்தது 232 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. இது தவிரப் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.