உக்ரைன் நாடாளுமன்றத்தில் பேசிய போலந்து அதிபர், உக்ரைன் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டு கொடுத்து விடக்கூடாது என வலியுறுத்தினார்.
உக்ரைன் போரில் மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்குள்ள அஜோவ் உருக்காலையை பாதுகாத்த உக்ரைன் படையினர் 2,500 பேர் ரஷ்ய படைகளிடம் சரண் அடைந்து விட்டனர். அவர்களில் ரஷ்ய தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு, எஞ்சியவர்கள் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த 2,500 பேர் கதி என்ன ஆகப்போகிறது என்பதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. அவர்களுக்கு கைதிகளுக்கான உரிமைகளை வழங்க வேண்டும், உக்ரைனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் உக்ரைனுக்கு திரும்பக்கொண்டு வர போராடுவோம் என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேசுக் கூறினார்.
இந்நிலையில் போலந்து நாட்டின் அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைன் சென்றுள்ளார். அவர் கீவ் நகரில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரை ஆற்றினார். அப்போது அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், “ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக் கூடாது. ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும்” என குறிப்பிட்டார்.