காசா மக்களுக்கு அடிப்படை உதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரையில் காசா பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,800-ஐ தாண்டியுள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காசாவுக்கான உணவு, மின்சாரம், குடிநீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால், காசா மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். உணவு, குடிநீர் கிடைக்காமல் திணறிவருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிற நிலையில், காசாமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு சவாலாக உள்ளது.
இந்தச் சூழலில் காசா மக்களுக்கு அடிப்படை உதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய இயக்குநர் டாக்டர் ரிச்சர்ட் பிரென்னன் கூறுகையில், “காசாவில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. மக்கள்மருத்துவ வசதி, உணவு, குடிநீர் இல்லா மல் திணறி வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக உதவிவழங்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் காசா மக்களை அடைவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இது குறித்து நாங்கள் உலக நாடுகளின் தலை வர்களிடம் பேசி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பின் தலைவர் பிலிப் கூறுகையில், இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனை சவக்கிடங்குகளில் உடல்களை வைக்க இடமில்லை. எனவே குழந்தைகளின் உடல்களை ஐஸ்கிரீம் வேன்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் வைத்து வருகிறோம். உடல்களை வைப்பதற்கான சிறப்பு பைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. காசா பகுதி மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறோம். எரிபொருள் இருப்பு தீர்ந்து வருவதால் மருத்துவமனைகள் முடங்கும் நிலை உருவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.