இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த வலியுறுத்தி நியூயார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நியூயார்க் நகரத்தில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் பதில் தாக்குதல் நடத்தவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளதை தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் போராட்டம் நடைபெற்றது. கிராண்ட் சென்டர் முனையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உலகிலேயே அதிக நடைமேடைகள் கொண்ட இந்த ரயில் நிலையம் எப்போது கூட்டம் அதிகமாக இருக்கும் இடம். அதனை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதால் ரயில் நிலையம் தாற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் போரை நிறுத்த வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில் மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பதுங்கி இருக்கும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ராணுவ செயல்பாடுகள் காசாவில் தொடர்ந்து விரிவுப்படுத்தி வருவதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேலில் இருந்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பலரை ஹமாஸ் படையினர் கடத்தி சென்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்களை விடுவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேலின் நெதன்யா பகுதியில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் படங்கள் வைக்கப்பட்டன. மேலும், ஓவியமாகவும் வரையப்பட்டன. பாகிஸ்தானில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். அந்நாட்டின் பெரிய நகரமான கராச்சியில் நடந்த போராட்டத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அவர்கள் பேரணியாக சென்றனர். பாலஸ்தீன கொடியை ஏந்தியபடி அவர்கள் பேரணி சென்றனர்.

இதற்கிடையே இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து நேற்று இரவு முழுவதும் விடிய விடிய குண்டு மழை பொழிந்தும் ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் பதிலுக்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக காசாவில் இணைய வசதி மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் காசா மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் காசா மருத்துவமனையில் இருக்கும் செய்தியாளர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலில், ”நாங்கள் அல்-அக்ஸா மருத்துவமனையில் இருக்கிறோம்; என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. WIFI, தொலைத்தொடர்பு சேவை என எதுவுமில்லை; ஆம்புலன்ஸுக்கோ, வேறு விஷயங்களுக்கோ யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. குண்டுகளிலிருந்து வரும் வெளிச்சம் மட்டுமே வானத்தை பிரகாசமாக்கிக்கொண்டிருக்கிறது. 500 மீட்டர் தொலைவில் இருப்பவர்களைக்கூட எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆம்புலன்ஸ் வைத்திருப்பவர்களும், மருத்துவப் பணியாளர்களும் எந்த இடங்களில் குண்டுகள் போடப்படுகிறதென செய்தியாளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், செய்தியாளர்களுக்கே என்ன நடக்கிறது என தெரியவில்லை; நாங்கள் நடப்பதை சொல்லவே விரும்புகிறோம். ஆனால், என்ன நடக்கிறது என புரியாத சூழலில் தான் நாங்களே இருக்கிறோம்,” இவ்வாறு தெரிவித்துள்ளார். துருக்கி சிம்கார்டு வைத்துள்ளதால் காசாவில் இருந்த செய்தியாளர் பகிர்ந்த தகவல் சமூகவலைதளம் மூலமாக வெளிச்சத்திற்கு வெளிவந்துள்ளது.