பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா துறை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி தற்போது, சீனா சுற்றுலாத் துறையைப் புதுப்பிக்கவும், அனைத்துலக விமானப் பாதைகளை மீட்டெடுக்கவும் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சீனா செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை, அந்த நாடுகளின் குடிமக்கள் வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்க அல்லது 15 நாட்களுக்கு மேல் பயணம் செய்ய சீனாவிற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக விசா தேவையில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சர்வதேச விமான பாதைகளை மீட்டெடுப்பது உட்பட, மூன்று ஆண்டு கடுமையான கொரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து, சுற்றுலாத் துறையை புதுப்பிக்க சீனா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இம்மாதத் தொடக்கத்தில், சீனா தனது விசா இல்லாத போக்குவரத்துக் கொள்கையை நார்வே உட்பட 54 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது. ஜூலையில் சிங்கப்பூர், புருணை குடிமக்கள் விசா இல்லாமல் 15 நாள் பயணம் மேற்கொள்ள அது அனுமதி வழங்கியது. ஆகஸ்ட் மாதம், சீனாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா மருத்துவச் சோதனை நடைமுறைகளை அந்நாட்டு அரசு கைவிட்டது.