மழை பாதித்த இடங்களில் தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ வரை மழை பெய்துள்ளது.
இதனால் சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை பணிமுடிந்து வீடு செல்வோர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் வரை செல்லக்கூடிய விரைவு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மழை பாதித்த இடங்களில் தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.