சட்டப்பிரிவு-370 ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

பிரிவினைவாத சக்திகள் அமைதியின்மையை உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பாக சட்டப்பிரிவு 370-ஐ எடுத்துக்கொண்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு தனி அரசியலமைப்பு, மாநிலக் கொடி மற்றும் மாநில நிர்வாக சுயாட்சியை வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ 2019-ல் ரத்து செய்வதற்கான வரலாற்று முடிவை நமது பிரதமர் நரேந்திர மோடி எடுத்தார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் “ஒரே தேசம், ஒரே கொடி” என்ற கொள்கையை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவை எடுத்தார்.

பிரிவினைவாத சக்திகள் நீண்ட காலமாக அமைதியின்மையை உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த சட்டப்பிரிவு 370-ஐ எடுத்துக்கொண்டன. இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்பத் தொடங்கியது. மாநிலம் முதல் முறையாக வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. ஆனால், சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிகமானது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியிருக்கிறது. இதன்மூலம் நமது பிரதமர் மோடியின் நிலைப்பாடு சரியானது என நிரூபணமாகி உள்ளது.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.