ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பக்தர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பக்தர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது விஐபிக்கள் சிலர் கோவிலுக்குள் சென்றதாக தெரிகிறது. அப்போது பக்தர்கள் சில வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் போது விஐபிக்களை மட்டும் ஏன் விடுகிறீர்கள் என்று ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து காவலாளிகளுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சண்டையாக மாறியது. இதில் காவலாளி தாக்கியதில் ஐயப்ப பக்தரின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. கோவில் வளாகத்தில் அதுவும் ஸ்ரீரங்கநாதர் கோவில் மூலஸ்தனம் முன்பாக ரத்தம் சிந்தியதால் கோவில் நடை மூடப்பட்டது. பின்னர் பரிகார பூஜைக்குப் பிறகு கோவில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.

ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை என்றும் பதிவிட்டுள்ளார். 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பினர். ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும், சன்னதி அருகே தாக்கப்பட்ட சிலருக்கு சிறப்பு சிகிச்சை அளித்ததையும் கேள்வி எழுப்பினர் மற்றும் இதன் விளைவாக கோயில் வளாகத்திற்குள் இரத்தக்களரி ஏற்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் திமிர். கோவில் நிர்வாகத்தில் இருந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலின் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக திருச்சி மாவட்டப் பிரிவினர் இன்று கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்த உள்ளனர் என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.