ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கை 2வது ஆண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் முட்டை வடிவில் வந்த பிரச்சனையாலும், மூதாட்டி கேட்ட கேள்வியாலும் பொதுமக்களிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதியவரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே எல்லை பிரச்சனை என்பது இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியது. உக்ரைனை எளிமையாக வீழ்த்தி கைப்பற்றி விடலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எண்ணினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் உதவிகளோடு உக்ரைன், ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்யாவின் ஏராளமான வீரர்கள் இறந்துள்ளனர். அதேபோல் உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த போர் 22 மாதமாக நீடித்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி வந்தால் போர் 2 ஆண்டுகளை நிறைவு செய்யும். இதற்கிடையே போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதோடு 2 ஆண்டுகளை நெருங்கும் போரால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. இதனால் ரஷ்யாவில் வாழும் மக்களுக்கு சில முக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ரஷ்யாவின் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் அடுத்த பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதன்படி தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களிடம் திடீரென்று மன்னிப்பு கேட்டுள்ளார். குறிப்பாக முட்டை, சிக்கன் விலை என்பது 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதாவது ஒவ்வொரு டிசம்பர் மாதமும் புதின் நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவார். மக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார். அந்த வகையில் அவர் இந்த ஆண்டும் நாட்டு மக்களை சந்தித்தார். இந்த வேளையில் பென்சன் வாங்கி வரும் இரினா அகோபோவா என்ற மூதாட்டி, ‛‛முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது’’ என கவலை தெரிவித்தார். இதை கேட்ட விளாடிமிர் புதின், ‛‛முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இது அரசின் தோல்வியாக நினைக்கிறேன். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பேன்’’ என்றார்.