சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதன் காரணமாக கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் உள்ள சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவை அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்துள்ளார். இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 116 பேர் பலியாகியுள்ள நிலையில், 200 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில், வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையிலும், சேதம் மற்றும் இடிந்துள்ள காட்சிகள் பதிவாகி உள்ளன. மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், சில கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர், போர்வைகள், அடுப்புகள், உடனடி நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் 88 தீயணைப்பு இயந்திரங்களுடன் 580 மீட்புப் பணியாளர்களை பேரிடர் பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.