பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைத்த மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை நேரில் சந்தித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
பஜ்ரங் புனியாவின் ஊரான ஹரியானாவின் சாரா கிராமத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, மல்யுத்த பயிற்சி களமான வீரேந்திர அகாராவில் வைத்து அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரர் தீபக் புனியாவும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு தொடர்பாக பஜ்ரங் புனியா கூறுகையில், “ஒரு மல்யுத்த வீரரின் அன்றாட வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ராகுல் காந்தி இன்றைக்கு இங்கு வந்தார். அவர் என்னுடன் மல்யுத்தம் மற்றும் உடற்பயிற்சி செய்தார். மல்யுத்தத்தின் நுட்பங்களை அறிந்து கொண்டார். மல்யுத்தத்தில் புள்ளிகள் எப்படி கிடைக்கும், அவை எப்படி கணக்கிடப்படுகிறது என்பது போன்ற சில விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் எங்களுடன் அமர்ந்து ரொட்டி சாப்பிட்டார்” என்று தெரிவித்தார்.
சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார். ஒரே ஒரு கேள்வி – இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் போடப்படும் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால், மற்ற குழந்தைகளை மல்யுத்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள்?. இவர்கள் அனைவரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள், இந்தியாவின் மூவர்ணக் கொடிக்கு இவர்கள் சேவை செய்யட்டும். அவர்கள் முழு மரியாதையுடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும்” என்று கூறியுள்ளார்.