கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கன்னட மொழியில் இல்லாத வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து துவம்சம் செய்து வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டைப் போல மொழி இன உணர்வு பிரச்சனை முதன்மையாக உள்ள மாநிலம் கர்நாடகா. அண்மையில் மார்வாரி பெண் ஒருவரை கன்னடர்கள், கன்னடத்தில் பேச சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள் கன்னட மொழியில்தான் இருக்க வேண்டும் என கன்னட ரக்ஷண வேதிகே அமைப்புகள் போராட்டத்தையும் நடத்தின. இதனைத் தொடர்ந்து அண்மையில் பெங்களூர் மாநகராட்சி ஒரு உத்தரவை பிறப்பித்தது. வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் கன்னட மொழி 60% பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அப்படி கன்னட மொழியில் பெயர் பலகைகள் இல்லாத வர்த்தக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்பதுதான் அந்த அதிரடி உத்தரவு. இதற்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கன்னட மொழியில் பெயர் பலகைகளை வைக்க வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பெங்களூரில் இன்று எம்ஜி ரோடு, பிரிட்ஜ் ரோடு, யுபி சிட்டி, சாம்ராஜ்பேட், கெம்பே கவுடா ரோடு, காந்தி நகர், ரெசிடென்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன்னட அமைப்பினர் குவிந்தனர். அப்போது கன்னட மொழியில் பெயர் பலகைகள் இல்லாத வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர் பலகைகளை அடித்து தூக்கி எறிந்தனர். சிலர் அந்த அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இத்தனையும் போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்றது. அப்போது, கர்நாடகாவின் ஆட்சி மொழி கன்னடம்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும் என ஆவேசத்துடன் முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால் பெங்களூர் மாநகரில் மால்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் அச்சத்துடன் இயங்குகின்றன. இந்தப் போராட்டம் தொடர்பாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டிஏ நாராயண கவுடா கூறுகையில், சட்டப்படி கர்நாடகாவில் பெயர் பலகைகளில் கன்னட மொழி 60% இடம் பெற்றிருக்க வேண்டும். கர்நாடகாவில் வர்த்தகம் செய்யும் யாரையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே நீங்கள் வர்த்தகம் செய்யலாம்.. ஆனால் எங்கள் மொழிக்கு மரியாதை கொடுத்துதான் ஆக வேண்டும். கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தராமல் கன்னட மொழியை சிறுமைப்படுத்தினால் உங்களால் இங்கே எதுவுமே செய்ய முடியாது என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து பெங்களூர் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.