சேலத்தில் சட்ட விரோத கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்: நாராயணன் திருப்பதி!

‘சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சட்ட விரோதமாக தங்களின் சொத்தாக மாற்றிக் கொள்ள நினைப்பவர்களின் அத்துமீறலை அடக்க வேண்டும்’ என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சேலம் – திருச்சி பிராதன சாலை குகை பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்தரை ஏக்கர் நிலம் 1957-ம் ஆண்டு இஸ்லாமிய சமுதாய மக்கள் மயானமாக பயன்படுத்திக் கொள்ள அன்றைய நகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது. சட்ட ரீதியாக இன்று வரை அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது.
ஆனால், சட்ட விரோதமாக இந்த நிலத்தில் மசூதி (பள்ளிவாசல்) கட்ட முயற்சித்து வருவதை உடன் நிறுத்த வேண்டும் என சேலம் முதல் அக்கிரஹாரம், ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்ட்டின் முத்தவல்லி, எஸ்.ஆர்.அன்வருக்கு சேலம் மாநகராட்சி கடந்த 18/07/2023 அன்று சட்ட ரீதியான அறிவிக்கையை அனுப்பியிருந்த நிலையில், அதை அலட்சியப்படுத்தி மயானத்துக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வழிபாட்டு தலம் கட்டுவது சட்ட விரோதம் என்பது தெரிந்தும் கடந்த பல வருடங்களாக சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், சில மத அடிப்படைவாத அமைப்புகளின் துணையோடு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல். கடந்த பல வருடங்களாக உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பினாலும், மாநகராட்சி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கினாலும் (W.P.No. 31577/2022) இந்த கட்டுமானப் பணிகள் அவ்வப்போது தடுத்து நிறுத்தப்பட்டாலும், தற்போது சட்ட விரோதமாக வேக வேகமாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது அதிர்ச்சியளிக்கிறது.

மாநகராட்சி நிர்வாகத்தை மீறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் துணையோடு சட்ட விரோத செயலை அரங்கேற்றி வரும் சேலம் முதல் அக்கிரஹாரம், ஜாமியா மஸ்ஜித் டிரஸ்ட் போர்ட்டின் முத்தவல்லி, எஸ்.ஆர்.அன்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை, அந்த நபர் அளித்துள்ள பொய்யான புகாரின் அடிப்படையில் நீதியை நிலை நாட்ட போராடுகிற உள்ளூர் பொது மக்களின் மீது வழக்கு தொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல சட்ட விரோதமும் கூட.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சட்ட விரோதமாக செயல்படும் மத அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சட்ட விரோதமாக தங்களின் சொத்தாக மாற்றிக் கொள்ள நினைப்பவர்களின் அத்துமீறலை அடக்க வேண்டும். ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டும். மயான பயன்பாடுக்கு உள்ள நிலம் போக எஞ்சியுள்ள நிலத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்கு விட்டு விட உத்தரவிட வேண்டும்.

பாஜகவினர் உள்ளிட்ட உள்ளூர் மக்களின் மீதுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். ஓட்டுக்காக பதற்றத்தை உருவாக்க நினைக்கும் மதவாத சக்திகளை ஒடுக்கி மதநல்லிணக்கத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும். சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறை தன் கடமையை சட்டத்திற்குட்பட்டு செய்ய வேண்டியது இந்த விவகாரத்தில் மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.