சுதந்திரத்துக்குப் பிறகு நரேந்திர மோடி பிரதமராகும் வரை, நாட்டின் பார்வை ‘இந்தியாவை மையமாக’ கொண்டிருக்கவில்லை என்று நாட்டை நேசிப்பவர்கள் உணர்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயண் குருகுல விஸ்வவித்யா பிரதிஷ்டாணம் நடத்திய பூஜ்ய புராணி சுவாமி ஸ்மிரிதி மகோத்ஸ்வத்தில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா கூறியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டை நேசித்தவர்களுக்கு, பாரதம் என்ற வார்த்தை மீது மரியாதை கொண்டவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வருத்தம் இருந்தது. அது, நாடு சுதந்திரம் அடைந்தாலும் அதன் பார்வை நாட்டை மையப்படுத்தியதாக இல்லாமல், வேறு எதையோ மையப்படுத்தியதாக இருக்கிறதே என்பதுதான்.
இந்த பார்வையை மாற்ற 1950 முதல் பாஜகவினர் பாடுபட்டார்கள். பல தலைமுறைகளாக பாஜக இதற்காக பாடுபட்டு வந்தது. இந்த நோக்கத்துக்காக பலர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான் இந்தப் பார்வை மாறியது. அதன் பிறகு ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் புகழை பாடத்தொடங்கின. நாடு தற்போது பலதுறைகளில் முன்னேறி வருகிறது.
மொபைல் ஃபோன் உற்பத்தியில் நமது நாடுதான் முதலிடத்தில் உள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதில் நாம் 3-வது இடத்தில் இருக்கிறோம். இதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியிலும் நாம் 3-வது இடத்தில் உள்ளோம். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, பிரவினைவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் காரணமாக இருந்தது. பல பத்தாண்டுகளாக அதன் சுமைகளை நாடு சுமந்து கொண்டிருந்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி சட்டப்பிரிவு 370ஐ முடிவுக்கு கொண்டு வந்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையை மோடி அரசு கொண்டிருக்கிறது. நமது எல்லையில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தவர்களை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் நாம் உறுதியாக எச்சரித்தோம். இந்தியாவின் பாதுகாப்புப் படையுடன் மோதினால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்ற அந்த எச்சரிக்கையை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலம் பிரதமர் மோடி கொடுத்தார். இவ்வாறு அமித் ஷா பேசினார்.