அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்!

அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்துவதற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக் குழுவில் நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வானார். தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தான் நீக்கப்பட்டதற்கு எதிராகவும், அதிமுக பொதுக் குழு, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகள் அவருக்கு பின்னடைவை தந்தன. ஆனாலும் தொடர்ந்து பல விதங்களில் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டு செயல்பட்டு வந்தார்.

இதனிடையே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பு பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதில் தான் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம் ஆகியவை அங்கீகரித்துள்ளன என்றும், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அதிமுகவின் கட்சிக் கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் முறையிட்ட நிலையில், தடை தொடரும் என்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் அதிமுக கரை வேட்டி கட்டாமல் காவி வேட்டி அல்லது வேறு நிறுவனங்களில் வேட்டி அணிந்து வருகிறார். அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது என்பதால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக தீர்மானங்களை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்த பிறகு இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்கிறோம்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை பிப்ரவரி 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.