தேர்தல் வெற்றிக்காகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைப்பு: மம்தா பானர்ஜி

“வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவே பாஜக எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கிறது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை நேற்று கைது செய்தனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திபூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினாலும், அதிலிருந்து மீண்டு வருவேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக அனைவரையும் சிறையில் அடைக்கிறது. வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தபோதிலும் எங்களது முன்மொழிவை அவர்கள் நிராகரித்துவிட்டனர். நாங்கள் கூட்டணியை விரும்பினோம், ஆனால், அவர்கள் கூட்டணிக்கு உடன்படவில்லை. தேர்தலில் பாஜக வெற்றி பெற சிபிஐ(எம்) உடன் அவர்கள் இணைந்துள்ளனர்” என்றார்.