ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பய் சோரன் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார்.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றதை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசுக்கு ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்கள் எழுந்து நிற்க சொல்லி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில் அரசுக்கு ஆதரவாக உள்ளவர்கள் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கோரினார். பின்னர் அரசுக்கு எதிராக உள்ளவர்கள் எழுந்து நிற்குமாறு அவர் தெரிவித்தார். அதன்படி, ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். ஆளும் கூட்டணிக்கு எதிராக 29 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்கள் எதிர்க்கட்சியான பாஜக தரப்பைச் சேர்ந்தவர்கள்.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் தேவை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரு இடம் காலியாக உள்ளது. எஞ்சியுள்ள 80 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஜேஎம்எம் கூட்டணிக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 47 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் சம்பய் சோரன். இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன்மீது விவாதம் நிகழ்த்தப்பட்டது. இதில் பேசிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், “ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதல்வர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன். நான் கைது செய்யப்பட்ட ஜன.31-ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும். என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். பாஜகவுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும். சவால் விடுக்கிறேன். அப்படி நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆம், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார். ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை” என்று தெரிவித்தார்.