தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. முதலில் நோட்டாவை வெல்லட்டும்: ஜெயக்குமார்

பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. முதலில் நோட்டாவை வெல்லட்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளான பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி தனித்தனியாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருவதால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்ற தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி இந்த முறை 40க்கு 40 என்ற இலக்கோடு களமிறங்கியுள்ளது. கூட்டணி அமைப்பதில் அதிமுக-பாஜக இடையே போட்டி நிலவும் நிலையில் பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ. பாஜக ஒரு மதவாத சக்தி. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. முதலில் நோட்டாவை வெல்லட்டும். அதற்குப் பிறகு அவர்களை நாங்கள் பொருட்டாக எடுத்துக் கொள்கிறோம். எங்களுடன் சில முக்கிய கட்சிகள் கூட்டணி பேசி வருகிறார்கள். அதிமுகவினருக்கு இலவு காத்த கிளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக மற்றும் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.