இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் மூன்றுமாத காலப் போருக்கு முடிவு கட்டும் நோக்கில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை ஹமாஸ் அமைப்பு முன்மொழிந்துள்ளது.
கத்தார் மற்றும் எகிப்து முன்மொழிந்த போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தனது மூன்றுகட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை ஹமாஸ் முன்மொழிந்துள்ளது. ஹமாஸின் இந்த உடன்படிக்கை நான்கரை மாதங்களுக்கு போர் நிறுத்தம் நீடிக்க வலியுறுத்துகிறது.
போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை ஹமாஸ் விடுதலை செய்கிறது. அதற்கு நிகராக இஸ்ரேல் சிறையில் உள்ள 1,500 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.
இரண்டாம் கட்டமாக மீதமுள்ள ஆண் பிணைக்கைதிகளை ஹமாஸ் இஸ்ரேலிடன் ஒப்படைக்கும். மூன்றாம் கட்டமாக உயிரிழந்த பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலிடம் வழங்கப்படும் என ஹமாஸ் தனது மூன்றுகட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் தெரிவிக்கிறது.
மேலும், மூன்றாம் கட்டத்தின் முடிவில் இருதரப்பினரும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான உடன்படிக்கைகளை உருவாக்க வேண்டும் என ஹமாஸ் எதிர்பார்க்கிறது. இந்த போர் நிறுத்தத்தில் இஸ்ரேல் காஸாவை விட்டு முழுவதுமாக வெளியேறியபின் மறுகட்டுமானப் பணிகள் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்தில் காஸாவிற்குள் உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் அதிகமான அளவில் அனுமதிக்கப்படும்.
அக்டோபர் 7ல் துவங்கிய இந்தப் போரில் இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு இதுவரை 27,000-த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். இன்றளவும் காஸா மண்ணில் ரத்தம் காய்ந்தபாடில்லை. இந்த உடன்படிக்கையை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் காஸாவிலும், மக்கள் மனதிலும் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.