ஊட்டியில் கட்டுமானப் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் பிரிட்ஜோ என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சொகுசு பங்களா கட்டப்பட்டு வந்தது. இதன் அருகே சுமார் 20 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. இதற்காக மண்ணை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் அருகே பழைய பயன்படாத நகராட்சி கழிப்பிட கட்டிடம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று கட்டுமானப் பணியின்போது எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டு கழிப்பிட கட்டிடம் சரிந்து விழுந்தது. இதனால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இதன்படி நிலத்தின் உரிமையாளர் பிரிட்ஜோ, காண்டிராக்டர் பிரகாஷ், மேஸ்திரிகள் ஜாகிர் அகமது மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36), உமா (35) சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.