பாஜகவுடன் தற்போது அமைத்துள்ள கூட்டணியே நிரந்தரமானது: நிதீஷ் குமாா்!

பாஜகவுடன் தற்போது அமைத்துள்ள கூட்டணியே நிரந்தரமானது என பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த மாதம் நிதீஷ் குமாா் இணைந்தாா். இதையடுத்து டெல்லியில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை புதன்கிழமை சந்தித்தாா். மேலும் பாரத ரத்தனா விருது அறிவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரான அத்வானியை அவருடைய புதுடெல்லி இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு பாட்னாவுக்குத் திரும்பினாா். அப்போது நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் நிதீஷ் குமாா் பேசியதாவது:-

நான் ஏற்கெனவே அங்கம் வகித்த கூட்டணிக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். இனி இதே கூட்டணியில்தான் தொடரவுள்ளேன். இதுவே நிரந்தரம் என்றாா்.

பிகாா் மாநிலத்துக்கான சிறப்பு அங்கீகாரம், சிறப்பு நிதி உதவி குறித்து டெல்லி சுற்றுப்பயணத்தில் விவாதிக்கப்பட்டதா என செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘பிகாா் மாநில வளா்ச்சிக்காக 2005-ஆம் ஆண்டு முதலே உழைத்து வருகிறேன். மாநில வளா்ச்சி தொடா்பான அனைத்தும் விவாதிக்கப்பட்டது’ என்றாா்.

நிதிஷ் குமாா் தலைமையிலான அரசின் மீது பிகாா் பேரவையில் வருகின்ற பிப்ரவரி-12-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சோ்ந்த பேரவைத் தலைவா் அவாத் பிஹாரி சௌதரி மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டும் அவா் பதவி விலக மறுத்து வருகிறாா். இதுகுறித்து நிதீஷ் குமாா் பேசுகையில், ‘இதைப்பற்றி கவலைகொள்ள தேவையில்லை. எங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் அனைத்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்றாா்.

243 உறுப்பினா்களைக்கொண்ட பிகாா் பேரவையில், முன்னாள் முதல்வா் ஜித்தன் ராமின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோா்ச்சாவைச் சோ்ந்த 4 எம்.எல்.க்கள், ஒரு சுயேச்சையுடன் சோ்த்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக 128 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.