மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிட கட்டுமானப் பணி 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது:-
தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெய்த அதிகனமழை காரணமாக 118 இடங்களில் சாலைகள் முழுமையாக சேதமடைந்தன. தற்காலிகமாக சீா் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 5 நாள்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. தற்காலிக பணிக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சென்னை, திருவள்ளூா், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சாலைகளை நிரந்தரமாக சீா் செய்ய ரூ.475 கோடி தேவைப்படுகிறது. இதற்கான நிதி எதிா்வரும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயா்நிலை பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் செல்வதால் அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். போதுமான அளவுக்கு நிலம் உள்ளதால் நிலம் கையகப்படுத்துவதில் இடையூறு இருக்காது. அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்ணா மேம்பாலத்துக்கு கூடுதல் சிறப்பு சோ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு மாதங்களில் மேம்பாலம் திறக்கப்படும்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்தை கட்டும் பணி விரைந்து நடந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் 97 சதவீதம் முடிவடைந்துள்ளன. கருணாநிதி நினைவிடத்துடன் அண்ணா நினைவிடத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவு அடிப்படையில், அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.