சிவ சேனா (உத்தவ் தாக்ரே அணி) கட்சியைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
போரிவலி (மேற்கு) வடக்கு புறநகர் பகுதியின் ஐசி காலனியில் நேற்று வியாழக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்திய மொரிஸ் நோரோகாவின் அலுவலகத்தில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், கோல்சல்கர் அடிவயிற்றிலும், தோல்பட்டையிலும் சுடப்படுவது பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் நோரோகாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு மும்பை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், “இது தவறானது மற்றும் துரதிஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் நடக்கக்கூடாது. லைவ் ஸ்ட்ரீமில் தெரியும் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் நட்புணர்வுடன், சுமூகமாக இருப்பதாகவே தெரிகிறது. அவர்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். கடந்த காலத்தில் அவர்கள் இருவருக்குள் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து முதல்வரும், துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸும் அறிந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
முன்னாள் காங்கிரஸ் பிரமுகரான பாபா சித்திக், என்சிபி-ல் இணைவது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அஜித் பவார், “பிப்.11 (சனிக்கிழமை) இன்னும் சிலர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள். கட்சியின் பெயர், சின்னத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பினை வழங்கியுள்ளதால் அனைவரும் என்சிபியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரை பாஜக எம்எல்ஏ ஒருவர் துப்பாக்கியால் சுட்டது காமிராவில் பதிவாகிய சில நாட்களுக்கு பின்பு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனிடையே, உத்தவ் அணி சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கோசால்கரின் கொலைக்காக மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.