கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்திய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் அமைச்சர் யார் என்று கூட உங்களுக்கு தெரியாதா என மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களிடம் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு மற்றும் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவு ஈரோடு சென்றார். நேற்று முழுவதும் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் சென்றார். அவரை வழியனுப்பி வைக்க அமைச்சர் முத்துசாமியும் உடன் சென்றார். அப்போது உதயநிதி ஸ்டாலினை மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதித்த பாதுகாப்பு படை வீரர்கள் அவருடன் வந்த அமைச்சர் முத்துசாமியை அனுமதிக்க மறுத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவரால் உள்ளே செல்ல முடியாததால் ஒரு கட்டத்தில் அப்படியே நின்றுவிட்டார். இதனால் அங்கிருந்த திமுகவினர் ஆக்ரோஷம் ஆகி பாதுகாப்பு படை வீரர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். அங்கிருந்த கோவை போலீஸாரும் வந்திருப்பது அமைச்சர் என்பதை பாதுகாப்பு படை வீரர்களிடம் எடுத்துக் கூறினர். அதன் பிறகே அமைச்சர் முத்துசாமி ஏர்போர்ட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வால் அமைச்சர் முத்துசாமி அப்செட் ஆகியது குறிப்பிடத்தக்கது. முத்துசாமி யார் என்று அகிருந்த திமுகவினர் எடுத்துச் சொல்லியும் பாதுகாப்பு படை வீரர்கள் கறார் காட்டியது தான் விவகாரத்தை வில்லங்கமாக்கி உள்ளது.