விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவித்து ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஆளுநர் ஆர்.என்.ரவி: டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. சுயசார்பு பாரதத்தைக் கட்டமைக்க நமது தேசத்தின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்காக சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்கு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அங்கீகாரம் இது. இந்தக் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் தாக்கத்தைக் கண்டு மனம் வருந்தி, நாட்டு மக்களுக்கு போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். தற்போது உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்திருக்க எம்.எஸ்.சுவாமிநாதன் மிக முக்கியக் காரணம். அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் ஆகியோருக்கும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. மூவருமே பாரதரத்னா விருதுக்கு முழுமையான தகுதி பெற்றவர்கள்.
உழவர் குடியில் பிறந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்த சரண்சிங் உழவர்களின் நலனுக்காக போராடி பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். அவரது பிறந்தநாள் தான் தேசிய உழவர் நாளாக கொண்டாடப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்ற வழிவகுத்தவர் நரசிம்மராவ். இந்தியா உணவுப் பஞ்சத்தில் தவித்த போது பசுமைப் புரட்சியை முன் நின்று நடத்தி நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்கிய பெருமை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உண்டு. இந்தத் தலைவர்களின் உழைப்புக்கும், தொண்டுக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரதரத்னா விருது சிறந்த அங்கீகாரம் ஆகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த, இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்படுவது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனையே சாரும். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக ஏற்கனவே பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை பெற்றிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாரத ரத்னா விருது கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.