தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்க தடை?: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் திண்பண்டமாக இருக்கிறது பஞ்சு மிட்டாய். புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பஞ்சு மிட்டாய்களை குழந்தைகள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த பஞ்சு மிட்டாயில் விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர். அதில், அந்த பஞ்சு மிட்டாய்களில் ரோடமின் பி (RHODAMINE B) என்ற புற்றுநோயை உண்டாக்கக்கூடிய விஷ நிறமி இருப்பது கண்டறியப்பட்டது. ஊதுபத்திகள் மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் ரசாயன நிறமியை, வடமாநில இளைஞர்கள் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது. புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சென்னை உட்பட பல நகரங்களிலும், பல்வேறு நிறம் கொண்ட பஞ்சு மிட்டாய்களை வடமாநிலத்தவர்கள் விற்பனை செய்து வரும் நிலையில், இங்கும், பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இங்கு விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டவையா என பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே, சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். அதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறமிகள் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் அறியப்படவில்லை.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் விற்பனை செய்யப்படும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சுற்றுலா மையங்களில் பஞ்சுமிட்டாய்கள் விற்கப்படுகிறதா என்பதை பார்க்க சொல்லி உள்ளோம். உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அந்த பஞ்சுமிட்டாய்களை ஆய்வு செய்து விசாரித்து அறிக்கை அளித்த பிறகு, அது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.