மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்பட்டது. பின்னர், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பொய்த்தது, கர்நாடக அரசு நீர் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் 10-ம் தேதி தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. எனவே, சம்பா பயிர்களை காப்பாற்ற, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். டெல்டா மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்களுக்கு 2 டிஎம்சி தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த 3-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், கடந்த 4-ம் தேதி முதல் நேற்று மாலை வரை விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, ஆய்வு செய்தார். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், போதுமான அளவு காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக நீர் திறப்பை நீட்டிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா நெற்பயிர்களை பாதுகாக்க, இன்று கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன்படி, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று மாலை 7 மணி முதல் விநாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனிடையே, அணையிலிருந்து பாசனத்துக்கு 3 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, குடிநீர் தேவைக்காக, 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 25 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 58 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக இருந்ததால், நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 3.9 அடியும், நீர் இருப்பு 3.28 டிஎம்சியும் சரிந்தது. தற்போது, அணையின் நீர்மட்டம் 66.52 அடியாகவும், நீர் இருப்பு 29.78 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.