ரஃபா நகரில் உள்ள இஸ்ரேல் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிறப்பித்த உத்தரவு மக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. பாலஸ்தீன ஆதரவு ஆயுத்க் குழுவான ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலை சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவத்திற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல் அரசு கடந்த 5 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேல் காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் காரணமாக வீடுகளை இழந்த காசாவை சேர்ந்த 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் ரஃபாவிலும் தொடர்ந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஃபா நகரின் மீது இஸ்ரேல் படையினர் வான் வழியாகவும் தரை வழியாகவும் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. குழந்தைகள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஃபா மீதான தாக்குதல் ஒரு பேரழிப்பு என இஸ்ரேலை அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கவலை தெரிவித்தன. இந்நிலையில் ரஃபா நகரில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்குள்ள பொதுமக்களை வெளியேற்ற தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹமாஸை ஒழிக்காமல், நான்கு ஹமாஸ் பட்டாலியன்களை ரஃபாவில் விட்டுச் செல்வதன் மூலம் போரின் இலக்கை அடைய முடியாது. ரஃபாவில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் போரிடும் பகுதிகளை காலி செய்ய வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், பிரதமர் நெதன்யாகு, ரஃபாவில் “செயல்படத் தயாராக” துருப்புக்களுக்கு உத்தரவிட்டார். மேலும் ஹமாஸ் மீது இஸ்ரேலின் “முழு வெற்றி” இன்னும் சில மாதங்களே உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் ரஃபாவில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.