மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், மராட்டிய மாநில அரசை கலைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநில கவர்னரிடம், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் சமீப காலமாக மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், மராட்டிய மாநில அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரின் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-
மராட்டிய மாநிலம் என்பது சத்ரபதி சிவாஜி, ராஜரிஷி சாகு மகாராஜ், ஜோதிராவ் பூலே, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் மகான்கள், சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளின் பூமி. மராட்டிய மாநிலம் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். சமூகம், அரசியல், கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் மராட்டிய மாநிலம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கு சிறந்த பாரம்பரியம் உள்ளது. சட்டம்-ஒழுங்கு விஷயத்திலும் மராட்டிய மாநிலம் சிறந்த மாநிலமாக கருதப்பட்டது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தின் சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கவும், மாநிலத்தில் அமைதியைக் குலைக்கவும் தற்போது முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. சிவசேனா கட்சி நிர்வாகி அபிஷேக் கோசல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிகையாளர் நிகில் வாக்லே புனேவில் போலீஸ் முன்னிலையில் தாக்கப்பட்டார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் காவல் நிலையத்தில் 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். கடந்த ஜனவரி 22-ந்தேதி மீரா சாலையில் மத ரீதியான பிரச்சினை காரணமாக பதற்றம் ஏற்பட்டது. ஜல்கான் பா.ஜ.க. நிர்வாகி மோரே சுட்டுக் கொல்லப்பட்டார். யவத்மால் நகரில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
குழந்தைகளின் கைகளில் ஆயுதங்கள் இருப்பதைக் கண்டோம். மாநிலத்திற்குள் ஏராளமான சட்டவிரோத ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தவறிய மாநில அரசை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.