ஆளுநர் ரவி ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை

“ஆளுநரை தமிழக அரசு மாண்போடு நடத்துகிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்” என்று காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

ஆளுநர் அவைக்கு வந்த உடன் தமிழிலேயே பேச முயற்சி செய்தார். அவருக்கு தமிழ் சரியாக வரவில்லை. பிரதமர் மோடி எப்படி திருக்குறளை படிக்கிறாரோ அதேபோல தவறான உச்சரிப்புடன் தமிழில் பேசினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கவில்லை என்பதை மிகப் பெரிய குறையாக சொன்னார்.

நாங்கள் சாமானியர்களாக கேட்கும் கேள்வி என்னவென்றால், தமிழகத்தில் மரபு எப்போதுமே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம். இதைக் கூட புரிந்துகொள்ளாதவராக ஆளுநர் இருக்கிறார். அல்லது வேண்டுமென்றே சட்டமன்றத்தின் மாண்பை சிதைப்பதற்காக இப்படிப்பட்ட செயலை ஆளுநர் செய்திருக்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். அவரின் ஒப்புதலோடுதான் ஆளுநர் உரை முடிவுக்கு வந்திருக்கிறது. ஒப்புதல் பெறப்போகும்போதே இது எனக்கு பிடிக்கவில்லை, இதை நான் படிக்க மாட்டேன் என்று கூறியிருக்கலாம். ஆனால், ஒப்புதல் அளித்துவிட்டு இங்கே வந்து நாடகம் அரங்கேற்றம் செய்கிறார். தெலங்கானாவில் எப்படி ஆளுநர் இல்லாமல் சட்டப்பேரவையை நடத்தினார்களோ அதேபோல இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற அவலங்களுக்கு முதல்வர் இடம் கொடுக்கக் கூடாது. ஆளுநரை தமிழக அரசு மாண்போடு நடத்துகிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார். அவரை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.