கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை மக்கள் பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும், சந்தேகம் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு, கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை நேரில் காட்டுவதற்கு தயார் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை தங்கள் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மக்கள் குவிந்திருந்தனர். ஆனால், திருச்சிக்கு செல்ல பேருந்துகள் கிடைக்கவில்லை என்றும், இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை சுமார் 5 – 6 மணி நேரம் வரை பேருந்துக்கு காத்திருப்பதாகவும் பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். வேலைக்காக செல்வோர், ஒரு நாள் லீவில் குடும்பங்களை பார்க்க செல்வோர், சுப காரியத்திற்கு செல்வோர், என அனைத்து தரப்பு பயணிகளும் பேருந்துகள் கிடைக்காததால் ஆத்திரமடைந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அந்த வகையில், எந்தவித அடிப்படை வசதியும் செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து மக்களை திமுக அரசு சிரமப்பட வைத்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை மக்கள் பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் சந்தேகம் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு, கிளாம்பாக்கத்தில் உள்ள வசதிகளை நானும் அமைச்சர் சேகர்பாபுவும் நேரில் காட்டுவதற்கு தயார் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
சென்னை மாநகரத்திற்கு 100 மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது 100 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வெறும் 3,600 பேருந்துகள் தான் வாங்கி இருக்கிறார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முதல் ஆண்டு கொரோனா காலம் முடிந்த பிறகு எஞ்சியிருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் 4000 பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. எனவே குற்றம் சாட்டுவதற்கு முன்பு தனது ஆட்சியில் எப்படி இருந்தது என்பதை அவர் நினைத்து பேச வேண்டும். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இன்றைக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை பல்வேறு பத்திரிக்கைகளிலும் பாராட்டி இருக்கிறது. இதனை அவரும் அறிந்து இருப்பார்.
அவருக்கு ஏதும் சந்தேகம் இருந்தால்.. அவருக்கு வருவதற்கு நேரம் கிடைத்தால்.. நானும், அமைச்சர் சேகர்பாபுவும் அவரை நேராக அழைத்துக்கொண்டு போய், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை காட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். பொதுமக்களை பொறுத்தவரை அங்குள்ள வசதிகளை முழுமையாக அனுபவித்து, பாராட்டி கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து மீண்டும் மீண்டும் தவறான செய்தியை பரப்புவதன் மூலமாக மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த எடப்பாடி நினைப்பது ஒரு தவறான செயல் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.