இதுதான் அவனது கடைசி பயணமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை: சைதை துரைசாமி

“இமாச்சல் செல்வதாக வெற்றி கூறினான். இதுதான் கடைசி பயணம் அப்பா என்றான். ஆனால் உண்மையில் இதுதான் அவனது கடைசி பயணமாக இருக்கும் என நான் ஒருகாலும் நினைக்கவில்லை” என சைதை துரைசாமி கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 4-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் வெற்றி துரைசாமி இறந்த நிலையில், அவரது உடல் நேற்று முன்தினம் தான் மீட்கப்பட்டது. இதையடுத்து, தனி விமானம் சென்னை கொண்டு வரப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்று இரவு 8.30 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தனது ஆசை மகனை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த சைதை துரைசாமி, அங்கிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

எனது அருமை மகன் அன்பு மகன் வெற்றி, நம்மை விட்டு பிரிந்தது என்பது விதியின் விபரீதமாக நான் நினைக்கிறேன். போகவே வேண்டாம் என்று நான் கூறினேன். அப்படி நான் அழுத்தி சொன்னால் போகாமல் இருப்பவன் வெற்றி. ஆனால், இந்த முறை இதுதான் அப்பா எனது கடைசி பயணம் என்று சொல்லிவிட்டு சென்றான். ஆனால், உண்மையில் அது அவனது இறுதிப் பயணமாகவே மாறும் என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை.

இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் ஆகிய உயர் பதவிகளிலும், பிற அரசுப் பதவிகளிலும் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற எனது மகன்களும், மகள்களும் இங்கு வந்திருக்கிறார்கள். எனது ஒரு மகன் போனாலும் எனக்கு நூற்றுக்கணக்கான மகன்கள் இருக்கிறார்கள். மகள்கள் இருக்கிறார்கள் என்ற மனவலிமையோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நீதி என்பது பொருளாதாரத்தால் தடைபட்டு போய்விடக் கூடாது என்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட 259 ஜாதிகளில் 170 ஜாதிகளை சேர்ந்த இளைஞர்களை அரசுப் பணியில் அமர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறேன். மீதமுள்ள 89 ஜாதிகளில் உள்ளவர்களை எல்லாம் அரசுப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம் என்பதை என் மகனின் மரணத்தில் நான் உறுதியெடுத்துக் கொள்கிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் அதை நோக்கி பயணிப்பேன். சக மனிதனுக்காக வாழ்ந்து எனது மகனின் ஆன்மாவை சாந்தியடைய வைப்பேன். எனது சேவையை தொடர்ந்து செய்வேன். இந்த சோக நிகழ்வில் பல இடையூறுகளுக்கு மத்தியில் வந்து எனக்கு ஆறுதல் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சைதை துரைசாமி கூறினார்.